6 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் உதகை படகு இல்லம். 
தமிழகம்

நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாது; மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம்: ஆட்சியர் பேட்டி

ஆர்.டி.சிவசங்கர்

சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட மாட்டாது எனவும், மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

தமிழக அரசு பல தளர்வுகளுடன் பொது முடக்கத்தை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில், சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநில அரசு பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. அரசின் வழிக்காட்டுதலின்படி மாவட்டத்தில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வழிபாட்டுத் தலங்களை 3 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும். 65 வயதுக்கு மேலானவர்கள் மற்றும் 10 வயதுக்குக் குறைவானவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பேருந்துகள், 50 சதவீதப் பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. அறிகுறிகள் இருந்தால் மக்கள் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருக்கும்.

மாவட்டத்தில் லாட்ஜ்கள், ரிசார்ட்டுகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக முறையாக மாவட்டத்துக்கு வருபவர்கள் இ-பாஸ் பெற்றிருந்தால்தான் அனுமதிக்கப்படுவர். உள்ளூர் மக்களும் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்ப இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் ஆதார், குடும்ப அட்டை ஆகிய ஆதாரங்களை இணைத்து விண்ணப்பித்தவுடன் அனுமதி வழங்கப்படும்.

பரவல் அதிகரிக்கும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் 57 ஆயிரத்து 476 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகள் அளவில் மாநிலத்தில் நாம் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். இதில், கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 4.13 சதவீதம். இதை 3 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பலர் அறிகுறிகளை மறைக்கின்றனர். மக்கள் விரைவாக வந்தால் உயிரைக் காப்பாற்ற முடியும். மாவட்டத்தில் நிகழ்ந்த 10 உயிரிழப்புகளில் 8 நபர்கள் தாமதமாக வந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் நிலையில், தொடர்புகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதால், மக்கள் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்" என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

SCROLL FOR NEXT