காவிரி நீரைப் பெற தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதமான நிலையிலும், கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. விளைநிலங்கள் பாலைவனமாகக் காட்சியளிக்கின்றன.
சுமார் 10 லட்சம் ஏக்கரில் காவிரி நீரை நம்பி சாகுபடியைத் தொடங்கியுள்ள விவசாயிகள், பல இடங்களில் பயிர்கருகுவதைப் பார்த்து கவலைக்குள்ளாகியுள்ளனர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புபடி உரிய நீரைத் தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கரும்புக்கு உரிய தொகை கிடைக்காததாலும், கடன் தொல்லையாலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால், வறட்சி யால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றும், அணைகளில் தண்ணீர் இல்லை என்றும் கர்நாடக முதல்வர் தவறான தகவல்களைக் கூறிவருகிறார்.
இந்த சூழலில், தமிழக முதல்வர் ஜெய லலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், ‘பிரதமர் நடவடிக்கை எடுப்பார்’ என்று தமிழக அரசு நம்பியிருக்கக் கூடாது. தற்போது ஒருபோக சம்பா சாகுபடிக்கும் கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவரச வழக்கு தொடர்ந்து, உரிய தண் ணீரைப் பெற வேண்டும். இல்லையேல், விவசாயிகளே வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.