புதுச்சேரி, காரைக்காலில் ரூ. 50ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் நிலுவை வைத்துள்ளோர் விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகை ரூ. 108 கோடியை தொட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் மின் கணக்கீடு நடக்கவில்லை. சராசரி அளவு எனக் கணக்கிட்டு மின் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். அக்கட்டணத் தொகையோ பல மடங்கு உள்ளதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர். மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அச்சத்தல், மக்கள் தங்களுக்கு வந்த கூடுதல் தொகையை செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த் தப்பட்டது.
இந்த இரட்டைச் சுமையால் எளிய மின்நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதிகளவு மின் கட்டண பாக்கி வைத்துள்ளோரிடம் மின் துறை சலுகை காட்டுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி என்பவர், இதுதொடர்பான விவரங்களை அறிய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்தார்.
அதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் பாக்கிஉள்ளோர் விவரங் களைக் கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து அதுதொடர்பான விவரங்கள் தரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ரகுபதி கூறியதாவது:தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி, ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் பாக்கி வைத்துள்ள அளவில் புதுச்சேரியில் ரூ. 88.66 கோடி, காரைக்காலில் ரூ. 19.58 கோடி என மொத்தம் ரூ. 108.24 கோடி பாக்கி உள்ளது. இதில் 8 அரசு பொது நிறுவனங்களும் அடங்கும்.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ள தொகை இவ்வளவு என்றால் முழு பாக்கி விவரம் இன்னும் பல கோடிகள் இருக்க வாய்ப்புள்ளது.
கோடிக்கணக்கில் நிலுவைத் தொகையை மின்துறை வசூலிக் காத நிலையில், இந்த நிதிச்சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படும். இத்தொகையை உடன் வசூலிக்க ஆளுநர், முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
மின் கட்டண பாக்கி பட்டியலில் தொழிற்சாலைகள், அரசியல் வாதிகள், பல மூடப்பட்டுள்ள மில்கள் அடங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.