தமிழகம்

வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் பெறப்பட்ட பொதுமக்களின் புகார்கள் குறித்து தெரிவிக்க காவல் ஆணையர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் விவரங்கள் குறித்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என துணை ஆணையர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா பரவலையடுத்து பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகம் வந்து நேரில் புகார் அளிக்க வேண்டிய தேவை இல்லை. பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு (வாட்ஸ்-அப் வீடியோ கால்) வழியாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நண்பகல் 12 முதல் 1 மணி வரை தன்னிடம் (63691 00100) தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்திருந்தார்.

எத்தனை புகார்கள்

பின்னர், இந்த திட்டத்தை விரிவுபடுத்தி சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வழியாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகின்றனர். புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் எத்தனை புகார்கள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளன, எத்தனை வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, அதற்கான காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனக்குஉடனடியாக தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துணை ஆணையர்களிடம் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT