‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ரோட்டரி மாவட்டம்-3000 இணைந்து நடத்திய ‘நலம் 2020’ எனும் ஆரோக்கியம் குறித்த ஆன்லைன் நிகழ்ச்சி கடந்த ஆக.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு மருத்துவர்கள் பங்கேற்று கருத்துரையாடினர்.
இந்த ஆன்லைன் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர்டி.ராஜ்குமார் கடந்த 28-ம் தேதி தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம்-3000 புதுக்கோட்டை ஆளுநர் சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
முதல் நாள் நிகழ்வில், சென்னைமருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல்துறை தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணன் ‘விந்தை எந்திரம்’ என்ற தலைப்பில் பேசும்போது, ‘‘மனிதஉடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதோடு, சுத்திகரித்தும் தரும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.
மலேரியா தாக்குதல், பாம்பு கடித்தல், வலி நிவாரணத்துக்காக உட்கொள்ளும் சில வகை மாத்திரைகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புண்டு. சிறுநீரகம் பாதிப்படைந்தால், கால் வீக்கம், சிறுநீர் வெளியேறும் அளவுகுறைதல், அதிக சோர்வு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இன்றைய நவீன மருத்துவத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் டயாலிசீஸ் செய்வதன் மூலமாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவும் குணம் பெற முடியும்’’ என்றார்.
2-ம் நாள் நிகழ்வில், கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனை இதயவியல் நிபுணரான மருத்துவர் பிரியா குபேந்திரன் ‘இதயத்தை திருடாதே’ என்னும் தலைப்பில் பேசும்போது,
‘‘மனித உடம்பின் மோட்டார் என்றழைக்கப்படும் கைப்பிடி அளவிலான இதயம், ஒரு நாளைக்கு 1 லட்சம் தடவைக்கும் மேலாக ரத்தத்தை பம்ப் செய்கிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால், ரத்த ஓட்டம் தடைபட்டு, மாரடைப்பு ஏற்படுகிறது. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உடையவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சீரான உணவு முறை,போதிய உடற்பயிற்சி ஆகியவற்றால் மாரடைப்பு வருவதைத் தவிர்க்கலாம்’’ என்றார்.
3-ம் நாள் நிகழ்வில், சென்னைஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நீரிழிவு நோய் துறை இயக்குநர் மருத்துவர் சண்முகம் ‘இனிக்கட்டும் வாழ்வு’ என்ற தலைப்பில் பேசும்போது, ‘‘நீரிழிவு நோய் என்பது ஒன்றும் புதிய நோயல்ல. சித்த மருத்துவகாலத்திலேயே 2 வகை நீரிழிவு நோய்கள் இருந்துள்ளன. நீரிழிவு வந்துவிட்டால் உயிர் பிழைக்க முடியாது என்ற நிலை, இன்சுலின் கண்டுபிடித்த பிறகு மாறிவிட்டது.
நம் உடம்பிலுள்ள ரத்தத்தில் சர்க்கரை கூடினாலோ, இன்சுலின் சுரப்பது குறைந்து போவதாலோ நீரிழிவு நோய் உண்டாகிறது. நீரிழிவுநோயாளிகளுக்கு கண், சிறுநீரகம்,இதயம் ஆகியவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு’’ என்றார்.
இந்த ஆன்லைன் நிகழ்வை ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார் ஒருங்கிணைத் தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரின் கேள்விகளுக்கும் மருத்து வர்கள் பதில் அளித்தனர். ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ரோட்டரி மாவட்டம்-3000 இணைந்து நடத்தின.