குமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தின் அந்தப் பகுதி இன்று களைகட்டியிருந்தது. கிரஹப்பிரவேசம் காணும் அந்தப் புது வீட்டின் முகப்பில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் எம்ஜிஆரின் ‘கடலோரம் வாங்கிய காற்று’ குளிராக வீசிக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் பெயரும்கூட எம்ஜிஆர் இல்லம்தான்!
தீவிர எம்ஜிஆர் பக்தரான மீனவர் கிறிஸ்டோபருக்காகத் தனது சொந்தப் பணத்தில் இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம். அதன் திறப்பு விழா இன்று காலையில் நடந்தது. வீட்டின் உள்ளேயும் ஆங்காங்கே அதிமுகவின் மூவர்ணங்கள் பளிச்சிட்டன. வீட்டு வாசலில் கட்சிக்கொடியும் கம்பீரமாய்ப் பறக்க, தொண்டனுக்குக் கட்டிக் கொடுத்த அந்த வீட்டை இன்றுபெருமையோடு வந்து திறந்து வைத்தார் தளவாய்.
அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துப் பேசிய கிறிஸ்டோபர், “எம்ஜிஆர் படம் என்றால் எனக்கு உயிர். சின்ன வயதில் இருந்தே அவர் மீது பாசமும், நேசமும் அதிகம். படகோட்டி படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் பகுதிவாசிகள் அனைவருமே எம்ஜிஆரின் ரசிகர்கள் ஆனார்கள். அப்போது இருந்தே அதிமுக தொண்டனான நான் கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு, எனக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பது நெகிழவைக்கிறது” என்றார்.
தொண்டனுக்கு வீடு தந்த தளவாய்சுந்தரம் இது குறித்து நம்மிடம் பேசுகையில், “கிறிஸ்டோபர் தீவிர அதிமுகக்காரர். எம்ஜிஆரின் மீது அதீதப் பாசம் கொண்டவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய இந்தப் பகுதிக்கு வந்தேன். அப்போது இந்த பகுதிவாசிகள் என்னிடம் வந்து, ‘அதிமுகவின் தீவிர உழைப்பாளி கிறிஸ்டோபரின் வீடு எப்படி இருக்கிறது பாருங்கள்’ என முறையிட்டார்கள். நானும் வீட்டைப் போய்ப் பார்த்தேன்.
கடல் காற்றுக்கும், மழைக்கும் அது பெருத்த சேதமாகியிருந்தது. பெரிய, பெரிய ஓட்டைகளும் இருந்தன. கிறிஸ்டோபர் தினமும் கடலுக்குப் போய்ப் பிழைக்கும் கடலோடி. அவர் தனியொருவராக இந்த வீட்டில் இருந்தார். மனைவி, குழந்தைகள் என யாரும் அவருக்கு கிடையாது. அந்தச் சூழலிலும் சளைக்காமல் மணக்குடியில் கட்சிப் பணிகளை முன்னெடுத்தார். அவரது வீடு இருந்த நிலையைப் பார்த்துவிட்டு நான் புனரமைத்துத் தருவதாக அப்போது வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்தேன்.
பின்பு, புனரமைப்பதைவிட புதிதாகவே கட்டிக் கொடுத்தால் என்ன எனத் தோன்றியது. யோசிக்கவே இல்லை; இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் இந்த வீட்டைக் கட்டினோம். கிறிஸ்டோபருக்கு சொந்த மனை இல்லை. பங்குப்பேரவை இடத்தில் இருந்து கொஞ்சம் அவருக்காகக் கொடுத்திருக்கிறார்கள். சொந்த மனை இல்லாததால் பசுமை வீடு திட்டத்தில் கட்டமுடியவில்லை. அதனால் எனது சொந்தப் பணத்திலேயே இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டேன். ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு தொண்டனுக்கு வீடு கட்டிக் கொடுத்ததன் மூலம் நாங்கள் அம்மாவின் பிள்ளைகளாகவே இருக்கிறோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது” என்றார்.