தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை மூடக் கோரி பாஜகவினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பாஜக மாநில வணிகர் பிரிவு தலைவர் ஏ.என்.ராஜகண்னன் மற்றும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து அளித்த மனு விபரம்:
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் தென்திருப்பேரையில் திருச்செந்தூர்- திருநெல்வேலி புறவழிச்சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை ஏற்கெனவே இரண்டு முறை திறக்கப்பட்டு மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகள் ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி டாஸ்மாக் கடை முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.விஜயலெட்சுமி, மாவட்ட செயலாளர் பி.பூமயில் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், உடன்குடி, விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள 30 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது நியாயவிலைக் கடைகளில் பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டன. அந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடையை பிரித்து, துணை கடை அமைக்க வேண்டும். கடைகளின் அறிவிப்பு பலகைகளில் இருப்பு பட்டியலை தினமும் எழுதி வைக்க வேண்டும். அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் கிடைக்கும் வகையில் கடைகளுக்கு பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும். ஊரடங்கு முடியும் வரை மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், அதன் தலைவர் கே.என்.இசக்கிராஜா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்த சி.மார்ட்டின் என்பவர் கடந்த 23-ம் தேதி சாத்தான்குளம் போலீஸார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று துண்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி செயலாளர் வெ.செந்தில்குமார் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள பிரபல தனியார் பள்ளி அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூல் செய்துள்ளது. மேலும், ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவில்லை. அந்த பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.