தமிழகம்

கோயில்கள் நாளை திறப்பு: தென்காசியில் ஏற்பாடுகள் தீவிரம்

த.அசோக் குமார்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோது, கிராமப்புறங்களில் சிறிய கோயில்களை திறக்க அனுமதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் நகராட்சிப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், நாளை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் உட்பட அனைத்து பெரிய கோயில்களிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் 6 அடி இடைவெளி விட்டு வர வட்டங்கள் வரையப்பட்டன. மேலும், கிருமிநாசினி, சோப் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோயில்களை 3 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் அனைத்து பக்தர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வரிசையில் 6 இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பால் கைகள், கால்களை சுத்தம் செய்த பிறகே வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல வேண்டும். சானிடைசர் வசதி செய்திருக்க வேண்டும்.

தெர்மல் ஸ்கேன், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பக்தர்களின் உடல்நிலையை சோதித்த பிறகே அனுமதிக்க வேண்டும். கோயில்களில் எதையும் தொடாமல் பக்தர்கள் செல்ல வேண்டும். பக்தர்களின் கைகளில் பிரசாதம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT