தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கையை வணங்கி மக்காச்சோளம் விதை நடும் பணியை விவசாயிகள் உற்சாகமாகத் தொடங்கி உள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க கடந்த 5 மாத காலமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக விவசாயிகள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டாலும், அவ்வப்போது விவசாயப் பணிகளை கவனித்து வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு கோடை மழை ஓரிரு முறை பெய்யதால் புரட்டாசி ராபி பருவத்தில் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்களை உழுது பண்படுத்தி, சூழல் கலப்பை, சட்டி கலப்பை, மோல்டு கலப்பை, பல் கலப்பை மூலம் நன்றாக உழுது களைகளை அகற்றி பண்படுத்தி வைத்துள்ளனர்.
விவசாயிகளுக்கான விதைகள் மற்றும் விதை பண்ணை அமைப்பதற்கு தமிழக வேளாண்மை துறை மூலம் உளுந்து, பாசி விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உளுந்து, பாசியை தவிர மக்காச்சோளம், வெள்ளை சோளம், கம்பு, சூரியகாந்தி, கொத்தமல்லி, பருத்தி, குதிரைவாலி போன்றவைகளும் பயிரிடுவதற்கு தனியார் விதை கடைகளில் விவசாயிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு விதைகளின் விலை இருமடங்காக உயர்ந்தாலும், விவசாயிகள் கடன் வாங்கி விதை வாங்கி வருகின்றனர். முதற்கட்டமாக கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், இதனை நம்பி ஓரளவு ஈரப்பதம் மற்றும் வறண்ட நிலங்களில் முதற்கட்டமாக மக்காச்சோளம் விதைகளை ஊன்றி வருகின்றனர்.
ஏக்கருக்கு 6 முதல் 8 கிலோ வரை மக்காச்சோள விதைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆவணி வளர்பிறை என்பதால், முதற்கட்ட நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடுவதை தொடங்கி உள்ளனர். மக்காச்சோளம் விதைகளை நிலங்களில் ஊன்றுவதற்கு முன் இந்தாண்டு நல்ல மழை பெய்ய வேண்டும். பூச்சு தாக்குதலில் இருந்து பயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என இயற்கையை வணங்கி தொடங்கினர்.
கடந்த காலங்களில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். இதனால் அரசு அறிவுறுத்தலின்படிகோடையில் வேப்பமுத்துவை அரைத்து வேப்பபுண்ணாக்கை ஏக்கருக்கு 100 கிலோ வீதம் விவசாயிகள் தூவி உழுதுள்ளனர்.
இதனால் மக்காச்சோளம் பயிரில் வேர் புழு, படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்கள் விடுபடும் என நம்புகின்றனர். இதனால் எதிர்பார்த்த பயிர் வளர்ச்சி இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
இந்நிலையில், அனைத்து வட்டார விரிவாக்க வேளாண்மை மையங்களில் வீரிய ஒட்டுரக விதைகளான மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், கம்பு, சூரியகாந்தி போன்ற அனைத்து விதைகளையும் தனியார் விதை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மானியத்தில் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அடுத்தகட்டமாக, புரட்டாசி முதல் வாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து உளுந்து, பாசி மற்றும் வெள்ளைச்சோளத்தை விதைப்பதற்கும் தயாராகி வருகின்றனர்.