தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 2 குளங்களை தேர்வு செய்து, அங்கு சுற்றுச்சூழலை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆய்வுப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆய்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் நீண்ட காலம் நீர் இருப்பு உள்ள 2 நீர்நிலைகளை தேர்வு செய்து, அது தொடர்பான முழு விவரங்களை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வனத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் மொத்தம் எத்தனை உள்ளன, அவற்றில் நீண்ட காலம் நீர் இருப்பு உள்ளவை எவை, அந்த நீர்நிலைகளில் கரைகளின் பலம் எப்படி உள்ளது, தூர்வார வேண்டிய அவசியம் உள்ளதா, நீர்நிலைகளின் பரப்பளவு எவ்வளவு, ஆக்கிரமிப்புகள் ஏதும் உள்ளதா, பறவைகள் அதிக அளவில வந்து செல்கின்றனவா, பறவைகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம், சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மேம்படுத்த வசதிகள் உள்ளதா, அந்த நீர்நிலைகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதற்காக, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர், என்ஜிஓ அமைப்பைச் சேர்ந்த ஒருவர், வனத்துறையினர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நீர்நிலைகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசித்து, எந்தெந்த நீர்நிலைகளை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசித்து அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலய குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு குளத்தை தேர்வு செய்ய விஜயநாராயணம் உள்ளிட்ட சில குளங்கள் ஆய்வில் உள்ளன. தென்காசி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி அருகே வாகைகுளம் கிராமத்தில் உள்ள குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு குளத்தை தேர்வு செய்ய சுந்தரபாண்டியபுரம், இலத்தூர் உள்ளிட்ட சில குளங்களில் ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட குளங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மேம்படுத்த எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன் அடிப்படையில் அரசு நிதி ஒதுக்கி, சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக உருவாக்க வாய்ப்பு உள்ளது ” என்றார்.