திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வாழ் மக்கள் முற்றிலும் சுற்றுலாவையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவந்தனர்.
ஒவ்வொருமுறை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம், சுற்றுலா தலங்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கொடைக்கானல் மக்களிடம் இருந்துவந்தது. ஆனால் ஏமாற்றமே தொடர்ந்தது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவித்தார்.
இதில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இ பாஸ் பெற்று செல்லவேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியது.
ஆனால், வெளிமாவட்ட சுற்றுலாp பயணிகள் தான் அதிகளவில் கொடைக்கானல் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதால் சுற்றுலாp பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்கின்றனர் கொடைக்கானல் மக்கள். எனவே கொடைக்கானல் வந்து செல்ல இ பாஸ் முறையை முற்றிலும் ரத்துசெய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விடுதிகள் திறக்க அனுமதி என்பதால் கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தவர்கள் சுற்றுலாத்தலங்களுக்கு சென்றுவருவர். அவர்களுக்கு கட்டுப்பாடுகளைவிதிக்ககூடாது.
இதற்கு இ பாஸ் முறை இடையூறாக இருக்ககூடாது என்பதால் அதை ரத்துசெய்ய கூறுகிறோம். அந்த ஒரு தளர்வையும் அரசு அறிவித்தால் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாவை நம்பியிருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வாய்ப்பாக இருக்கும் என்கின்றனர், கொடைக்கானலில் சுற்றுலாபயணிகளை நம்பி சிறுதொழில் செய்பவர்கள்.