கோவை கிராஸ்கட் சாலை பகுதியில் மூடப்பட்டுள்ள கடைகளுக்கு முன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சிப் பணியாளர்கள். 
தமிழகம்

கரோனா தொற்று அதிகரிப்பால் கோவை கிராஸ்கட் சாலை கடைகளை 7 நாட்களுக்கு மூட வியாபாரிகள் முடிவு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று அதிகரிப்பால், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கடைகளை 7 நாட்களுக்கு மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோவை கிராஸ்கட் சாலை மற்றும் கிராஸ்கட் சாலை-100 அடி சாலையை இணைக்கும் 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள், துணிக் கடைகள், செல்போன் கடைகள், நகைக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மாநகரில் நெரிசல் மிகுந்த, அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

இந்நிலையில், கிராஸ்கட் சாலையில் உள்ள நகைக் கடைகள், துணிக் கடைகள், செல்போன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று பரவுகிறது. இந்த சாலைக்கு அருகில் உள்ள 100 அடி சாலையில் ஒரு நகைக் கடையில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

இப்பகுதியில் உள்ள செல்போன் பழுது பார்ப்பு மற்றும் உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். மேலும், சமூக விலகல், தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுவது இல்லை எனவும் புகார்கள் எழுந்தன.

இங்குள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கிராஸ்கட் சாலை வியாபாரிகள் சங்கத்தினர் கூறும்போது, "இப்பகுதியில் மக்கள் அதிகம் கூடுவதால், கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், 100-க்கும் மேற்பட்ட கடைகளை 7 நாட்களுக்கு முழுமையாக மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம். இன்று (ஆக. 31) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கடைகள் அடைக்கப்படும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம்" என்றனர்.

SCROLL FOR NEXT