திமுகவுக்கு தேர்தல் பணியாற்ற பாமக நிர்வாகிக்கு பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் அழைப்பு விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ (I-PAC) நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் மக்களின் மனநிலை, எதிர்பார்ப்பு, வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி வாரியாக ஐ-பேக் பணியாளர்கள் அறிந்து வருகின்றனர். இதற்காக புதிய பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தானியங்கி முறையில் பலருக்கு இ-மெயில் மூலம் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளரும், பாமக சமூக ஊடக பேரவை தலைவருமான இர.அருள் என்பவருக்கு இ-மெயில் மூலம் பணிக்கான அழைப்பை ஐ-பேக் நிறுவனம் விடுத்துள்ளது. அதில், சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவுக்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டால், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தில் 9 மாதங்களுக்கு வேலை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இர.அருளிடம்கேட்டபோது, ‘‘ஐ-பேக் நிறுவனத்திடம் இருந்து பணிக்கான அழைப்பு எனக்கு இ-மெயிலில் வந்துள்ளது. அதில், நீங்கள் எந்த தொகுதி, படிப்பு, சம்பளம், இருசக்கர வாகனம் உள்ளதா என்பது போன்ற கேள்விகள் உள்ளன. 9 மாதங்கள் பணியாற்றினால் தேர்தல் குறித்த பணிகளை அறிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற அழைப்பு தானியங்கி முறையில் அனுப்பப்படுவதுதான் என்றாலும், திமுகவை எதிர்க்கும் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இதை அனுப்புவது நியாயம்தானா’’ என்றார். ஐ-பேக் நிறுவனத்தின் பணிக்கான அழைப்பு விவரத்தை இர.அருள் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.