தமிழகம்

‘இல்லந்தோறும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிலவட்டும்’ - ஆளுநர், முதல்வர், தலைவர்கள் ஓணம் வாழ்த்து

செய்திப்பிரிவு

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓணம் திருநாளில் நமது அன்பு, இரக்கம், உழைப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் அர்ப்பணிக்க உறுதிஏற்போம். இத்திருநாள் மக்கள்வாழ்வில் அமைதி, வளம், ஆரோக்கியத்தை அளிக்கட்டும்.

முதல்வர் பழனிசாமி: சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மலையாள மக்களால் சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இத்திருவோண நாளில், மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இத்திருவோணத் திருநாளில் இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும். மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கேரள மக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப் போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும்மலையாள மக்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வரும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஓணம் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு,பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கேரள மக்கள் அனைவரதுவாழ்விலும் இன்னல் நீங்கி, வளமும், நலமும் நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்த மக்கள் அனைவரும் கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவம், ஒற்றுமை தழைத்தோங்கட்டும்.

சமக தலைவர் சரத்குமார்: இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் கேரள மக்கள் உறுதியான உள்ளம் கொண்டவர்கள். கரோனாவில் இருந்து தேசம் முழுமையாக விடுபட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த நன்னாளில் பிரார்த்திப்போம்.

இதேபோல், அதிமுக சார்பிலும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT