கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் தலைமறைவாவதும், மது அருந்தி விட்டு வரும் சூழலும் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. சிகிச்சையில் இருக்கும்போது மது அருந்தி வருவோரின் சுய ஒழுக்கம் மோசமானது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஆக.30) வாட்ஸ் அப்பில் கரோனா நிலவரம் தொடர்பாக தெரிவித்த விவரம்:
"கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் தலைமறைவாகி விடுவதாக மருத்துவர்கள் மூலம் புகார்கள் வந்துள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடைக்குச் சென்று மது அருந்தி விட்டு மாலையில் தனியாக வார்டுக்கு வந்துள்ளார். இச்சூழலை எப்படி கையாள்வது என்று மருத்துவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிகிச்சையில் இருக்கும்போது மது அருந்தி வருவோரின் சுய ஒழுக்கம் மோசமானது.
மக்கள் தொடர்ந்து தனிமனித இடைவெளி பின்பற்றல், முகக்கவசம் அணியாதது, தேவையில்லாமல் பொது இடங்களில் இருப்பது போன்ற விஷயங்களை மீறினால் செப்டம்பர் நடுப்பகுதியில் புதுச்சேரியில் நாள்தோறும் ஆயிரம் பேருக்குத் தொற்று ஏற்படலாம். இப்போது இருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இரட்டிப்பு விகிதமாகிவிடும்.
புதுச்சேரியில் 90 சதவீத இறப்புகள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுகாதார நோய்கள் ஆகியவற்றுடன் 60 வயதை கடந்தோருக்குக் கரோனாவுடன் இணையும் போது ஏற்பட்டுள்ளது.
மக்கள் இன்னும் கூட்டமாக கூடுகிறார்கள். எதற்காக பாதுகாப்பு நடவடிக்கை செய்கிறோம் என்று புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். சிகிச்சை செலவானது அத்தியாவசிய சேவை நிதிகளில் இருந்தோ, கடன்களில் இருந்தோ செலவிடப்படுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள்தான் முற்றிலும் பாதுகாப்பானது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நமக்கு பாதுகாப்பை தரும் என்பதை உணர்வது அவசியம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.