கரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி 
தமிழகம்

கரோனா பணியில் உயிரிழந்த  காவலர்களுக்கு அஞ்சலி

கரு.முத்து

காவல்துறை வட்டாரத்தில் சக காவலர்களின் தியாகத்தை மதிக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகம் நடக்க ஆரம்பித்து இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடி துரைமுத்துவை பிடிக்கப் போய் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் இறுதிச் சடங்கில் காவல்துறை தலைவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறியது காவல்துறையினர் மத்தியில் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது.

தற்போது கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த காவலர்களின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தி காவலர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்றுள்ளது கடலூர் மாவட்ட காவல் துறை.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த இரு காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.30) மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த நடராஜன், நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த ஜூலியன் குமார் ஆகியோர் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.

கரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி

கரோனா தடுப்புப் போரில் இறந்துபோன முன் கள வீரர்கள் இருவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இருவரின் திருவுருவ படத்திற்கும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மலர் தூவி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், தனிப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன், ஆயுதப்படை ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர். அதேநேரத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் இறந்துபோன நடராஜன், ஜூலியட்குமார் ஆகியோரின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அங்குள்ள காவல்துறையினரால் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவலர்களின் தியாகம் மதிக்கப்படும் போது அவர்களின் பணியில் மென்மேலும் அர்ப்பணிப்பு கூடும்.

SCROLL FOR NEXT