புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதிதாக 571 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. அத்துடன் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பரிசோதனை எண்ணிக்கையை அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி நேற்றைய தினம் 1,866 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கோள்ளப்பட்டது. இதில் 571 பேருக்குத் தொற்று இருப்பது இன்று (ஆக.30) உறுதி செய்யப்பட்டுள்ளது,
இதில், புதுவை - 516, காரைக்கால் - 12, ஏனாம் - 42, மாஹே - 1 என மொத்தம் 571 பேருக்குத் (30.60 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது மாநிலம் முழுவதும் 2,537 பேர் மருத்துவமனையிலும், 2,401 பேர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,968 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுவையில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய திமுக எம்எல்ஏ சிவா
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சென்னை மருத்துவமனையிலிருந்து புதுச்சேரிக்கு திமுக எம்எல்ஏ சிவா திரும்பியுள்ளார்.
புதுவையில் கரோனா பாதிப்பு, அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கெனவே அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திமுக தெற்கு மாநில அமைப்பாளர் எம்எல்ஏ சிவாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடார்,
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் குணமடைந்து புதுச்சேரியிலுள்ள அவரது வீட்டுக்கு இன்று (ஆக.30) திரும்பியுள்ளார். இருப்பினும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு அவர் தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உளவுத்துறை எஸ்.பி.க்குக் கரோனா
புதுச்சேரி உளவுத்துறை எஸ்.பி. மோகன்குமார் உடல்நலக்குறைவால் ஜிப்மரில் கரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்குத் தொற்று உறுதியானதால் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.