உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி கிராமத்தில் மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழிகள் வளர்க்கும் பட்டதாரி இளைஞர் பா.மனோஜ். 
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கரோனா ஊரடங்கு நேரத்திலும் நாட்டுக் கோழிகள் மூலம் வருவாய் ஈட்டும் இளைஞர்

சுப.ஜனநாயகச் செல்வம்

கரோனா ஊரடங்கால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கும் நிலையில், உசிலம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பாண்டித் துரையின் மகன் பா.மனோஜ் (25). எம்.எஸ்சி. படித்துள்ளார். தற்போது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டே நாட்டுக் கோழி வளர்ப்பிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

கரோனா ஊரடங்கால் பலர் வேலையை இழந்து வரும் சூழ்நிலையில், தனது குடும்பத்துக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் திறந்தவெளி யில் மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து மாதம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, எனது தந்தை 8 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். தற்போது தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல் நிலம் தரிசானது. இதனால் நாட்டுக்கோழிகளை வளர்க்க முடிவெடுத்தார். ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கடந்த 5 ஆண்டாக இத்தொழிலை நான் மேற்கொண்டு வருகிறேன்.

தற்போது 400 கோழிகள் உள் ளன. இயற்கையான முறையில் தாய்க் கோழிகள் மூலமே அடை வைத்து குஞ்சுகள் பொரிக்கின்றன. பெருவிடை, சிறுவிடை ரகக் கோழிகள் கலப்பில் குஞ்சுகள் பொரிக்கின்றன. இதனால் ஒரு கோழி குறைந்தது 2 கிலோவுக்கு மேல் இருக்கும். மக்காச்சோளம், கம்பு மற்றும் சிறுதானியங்களை விளையவைத்து அதன் மூலம் தீவனம் தயாரித்து வழங்குகிறேன்.

கிலோ ரூ. 400-லிருந்து ரூ.450 வரை விற்கிறேன். கரோனா ஊரடங்கிலும் தேடி வந்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். நாட்டுக்கோழி இறைச்சி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் கரோனா ஊரடங்கில் விற்பனை அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT