தமிழகம்

தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் தொடங்கி வைத்த பணிகளை மீண்டும் தொடங்கி வைத்த திமுக எம்பி

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளை பிரதான சாலை களுடன் இணைக்கும் வகையில் பாரதப் பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 4 ஊராட்சிகளில் மத்திய அரசு நிதியில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த 28-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அரூர் துணை ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில், இதே பணிகளை தருமபுரி மக்களவை உறுப்பினர்(திமுக) செந்தில்குமார் மீண்டும் நேற்று தொடங்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தருமபுரி எம்பி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:

தருமபுரி மாவட்டத்தில் என்னுடைய முயற்சியில் மத்திய அரசின் பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் புதிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 28-ம் தேதி பணிகள் தொடங்கப் பட்டுள்ள 4 பணிகள் உட்பட 17 சாலைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி மக்களவை உறுப்பினர் என்ற வகையில் மத்திய அரசிடம் நான் பரிந்துரை செய்தேன்.

இந்நிலையில், மக்களவை உறுப்பினரான எனக்கு அழைப்பு விடுக்காமல், மாநில அரசின் மக்கள் பிரதிநிதியான உயர் கல்வித்துறை அமைச்சர் இப்பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இது ஜனநாயக மரபுகளை மீறும் நடவடிக்கை. அரசு நிகழ்ச்சிகளுக்கு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் புறக்கணிப்பதை திட்டமிட்டே தமிழக ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT