கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதியது. இதைத் தொடர்ந்து அந்த மினி பேருந்து லாரி மீதும் கார் மீதும் மோதியது. இதில் மினி பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தால் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள வீரமலை கிராமத்தை சேர்ந்த முன்னாள் திமுக எம்எல்ஏ வி.சி.கோவிந்தசாமி. இவரது மகன் அண்ணாதுரை. இவர் இன்று காலை, தனது மோட்டார் சைக்கிளில், ஓசூர் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது மகள் மோகனபிரியா(19) என்பவரை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சர்வீஸ் ரோட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வாகனத்தை திருப்பும் போது, ஒரு மினி பேருந்து - அண்ணாதுரை ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அண்ணாதுரை, மோகனபிரியா ஆகிய 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து, அங்கு சாலையோரம் காஸ் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்த லாரியின் முன் பக்கம் மோதியது. அந்நேரம் அவ்வழியே எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதிவிட்டு, தேசிய நெடுஞ்சாலையின் மறுபகுதிக்கு மினி பேருந்து சென்றது.
அப்போது, கண்டெய்னர் லாரியின் முன்பகுதியில் மினி பேருந்து மோதியது. இதில் லாரியின் ஓட்டுநரான பீகார் மாநிலத்தை சேர்ந்த அஸ்ரப்(40), லாரியில் இருந்து எகிறி குதித்தார்.
கட்டுபாட்டை இழந்த லாரி ஓட்டுநர் இல்லாமல் முன்னால் சென்ற கார் மீது மோதி இடது பக்கம் உள்ள பள்ளத்தில் நின்றது. கார் சென்டர் மீடியனில் மோதி நின்றது. இதில் காரில் பயணம் செய்த பெங்களூரைச் சேர்ந்த யாசூப், முஸ்தபா உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர்.
மினி பேருந்தை ஓட்டிய பெங்களூரு ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத்(40), இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்திய மினி பேருந்து மீது பெங்களூரில் இருந்து வந்த மற்றொரு கார் மோதியது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணம் செய்த 3 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுக்கா இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்ஐ மதனலோகன் உள்ளிட்ட போலீஸாரும், கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மினி பேருந்தில் இடிபாடுகளில் சிக்கி அலறி கொண்டிருந்தவர்களை, மினி பேருந்தின் பக்க வாட்டை உடைத்து மீட்டனர். மீட்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நிகழ்ந்த பகுதியில் கண்ணாடிகள் நொறுங்கி கிடந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த மினி பேருந்து ஓட்டுநரான ஸ்ரீநாத் உடலை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்த பாரதி(40), அவரது மகள் ரேஷிமி(18), மகன் ரோகன்(15), மண்ணுபாய், காயத்திரி, லீனா, ரேகா, மனோகர், பூர்ணிமா, விஜயலட்சுமி, மீராபாய், அருண்குமார், பிரதீப், விமலாபாய் ஆகிய 14 பேர் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இருசக்கர வாகனத்தில் சென்று படுகாயம் அடைந்த அண்ணாதுரை, மோகனப்பிரியா ஆகிய இருவரும் மேல்சிகிச்சைகாக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் லாரி ஓட்டுநரான அஸ்ரப், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பெருமாள் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் இருபுறமும் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் அனைத்து கிரேன் மூலம் அகற்றப்பட்டன.