தமிழகம்

மீன்பாசி குத்தகை விடப்பட்டதால் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்கவில்லை: அமைச்சர் ஜெயபால் விளக்கம்

செய்திப்பிரிவு

நீர்நிலைகளில் பொது ஏலம் மூலம் மீன்பாசி குத்தகை விடப் பட்டுள்ளதால் உள்ளூர் மீனவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படவில்லை என அமைச்சர் கே.ஏ.ஜெயபால் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கள் அ.சவுந்தரராஜன், கே.பால கிருஷ்ணன், கே. தங்கவேல், இரா.அண்ணாதுரை, ஆர்.ராம மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், வி.பொன்னுபாண்டி ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெய பால் பேசியதாவது:

மீன் உற்பத்தி அதிகரிக்க..

தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், கழிமுகங்கள், சதுப்பு நிலங்கள் நீர்த்தேக்கங்கள் என 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நன்னீர் பகுதிகள் உள்ளன. மதுரை, தேனி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தீவிர உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்களில் மீன்பாசி குத்தகை பொது ஏலம் மூலம் 3 ஆண்டுகளுக்கு விடப்படுகிறது. இதில் உள்நாட்டு மீனவர் சங்கங்களும் பங்கேற்கலாம்.

கடந்த 2012-13-ல் 35 நீர்த்தேக்கங்களில் மீன்பிடி உரிமை ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு ரூ.12.10 கோடி வருவாய் வந்தது. எஞ்சியுள்ள நீர்த்தேக்கங்களில் 2015-16-ம் ஆண்டில் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடி உரிமையை ஏலம் எடுக்கும் குத்தகைதாரர் அந்தந்த நீர்நிலைகளைச் சேர்ந்த பாரம்பரிய மற்றும் பங்கு மீன்பிடிப்பு செய்யும் மீனவர்களைக் கொண்டே மீன் பிடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. எனவே, மீன்பாசி குத்தகையின் மூலம் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஜெயபால் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT