கரோனா ஊரடங்கு காலத்தில், விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை தோட்டக்கலைத் துறை நேரடியாக கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் நுகர்வோரிடம் விற்றதாலும், பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கியதாலும் மாம்பழ விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிஉள்ளனர்.
இந்த ஆண்டு 1.85 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெற்றது. 1.61 லட்சம் டன் மாம்பழம் விளைந்தது. கரோனா ஊரடங்கால் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாததால், அவற்றை விற்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை நாடினர். அரசு எடுத்த நடவடிக்கைகளால் மாம்பழங்கள் வீணாகாமல், உரிய நேரத்தில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கப்பட்டன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள், பழங்களை தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டேன்கோடா) மூலம் நேரடியாக கொள்முதல் செய்தோம். பண்ருட்டி, புதுக்கோட்டையில் இருந்து பலாப்பழம், கன்னியாகுமரியில் இருந்து அன்னாசி, நாமக்கல், தேனியில் இருந்து பப்பாளி, திராட்சை,திருச்சி, கடலூர், கோவையில் இருந்து வாழைப்பழம் ஆகியவை வரவழைக்கப்பட்டன.
நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கணிசமாக மாம்பழங்களை கொள்முதல் செய்தோம்.
அரசு தோட்டக்கலைத் துறையின் 63 பண்ணைகளில் விளைந்த மாம்பழங்களையும் சென்னை போன்ற பெருநகரங்களில் விற்றோம். ஓட்டல் உணவுகளை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மூலமாக அவற்றை வீடுகளில் டோர் டெலிவரியும் செய்தோம். முலாம்பழம், தர்பூசணி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன.
‘இ-தோட்டம்’ இணையதளம் மூலம் ஆன்லைனில் பெறப்பட்ட 20,826 ஆர்டர்கள் மூலம் ரூ.68.97 லட்சம் மதிப்புள்ள 252 டன் காய்கறிகள், ரூ.55.88 லட்சம் மதிப்புள்ள 153 டன் பழங்கள் என ரூ.1 கோடியே 24 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி, பழங்கள் விற்கப்பட்டன. 22.52 டன் மாம்பழங்கள் பேக்கிங்காக (அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த்) விற்கப்பட்டன. இதனால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மா, பலா, வாழை கொண்ட 475 முக்கனி பேக்கிங்குகள், நெல்லிக்காய், சாத்துக்குடி, எலுமிச்சை, கொய்யா, வெள்ளரிக்காய், இஞ்சி ஆகியவை கொண்ட 606 ஆரோக்கிய பேக்கிங்குகள் விற்பனையாகின.
கிருஷ்ணகிரியில் உள்ள 29 பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் செயல்படுகின்றன. கரோனா காலத்தில் இதுவரை 1,154 டன் மாம்பழங்கள் பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாம்பழம் அழுகி வீணாவது தவிர்க்கப்பட்டதால், மாம்பழ விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கரோனா ஊரடங்கால் பாலுக்கு விலை கிடைக்கவில்லை என்று பாலை சாலையில் கொட்டியும், தக்காளி உள்ளிட்டவற்றை பறிக்காமல் விட்டும் பல விவசாயிகள் நஷ்டம் அடைந்த நிலையில், தோட்டக்கலைத் துறை நடவடிக்கையால் மாம்பழ விவசாயிகள் லாபம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.