தமிழகத்தில் சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும்வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தருமபுரி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும், சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 செ.மீ, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, மதுரை விமான நிலையம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 2 செ.மீ, ராமநாதபுரம் முதுகுளத்தூரில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.