சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் மட்டும் செப்.7 முதல் சோதனைரீதியாக 2 வாரங்களுக்கு நேரடி விசாரணையை தொடங்க தலைமை நீதிபதி அடங்கிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் சென்னைஉயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றமதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் மூடப்பட்டு வழக்குகள் காணொலி வாயிலாக நடைபெற்றன. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கீழமை நீதிமன்றங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் 150 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு வழக்குகள்காணொலி வாயிலாக விசாரிக்கப்படுவதால் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எனவே உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் சார்பிலும், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பிலும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நீதிமன்றங்களை வழக்கம்போல் திறந்து நேரடி விசாரணையை மேற்கொள்வது தொடர்பான கூட்டம் நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுப்பையா, எம். சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வரும் செப்.7-ம் தேதி முதல் சோதனைரீதியாக 2 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் மட்டும் நேரடி விசாரணையைத் தொடங்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் காலையில் 3 அமர்வுகள் நேரடி விசாரணையிலும், மாலையில் 3 அமர்வுகள் என மொத்தம் 12 நீதிபதிகள் நேரடி வழக்கு விசாரணையில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேரடி விசாரணையில் ஈடுபடாத நீதிபதிகள் காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில்கரோனா தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இல்லை என தெரியவரும் பட்சத்தில் மற்ற அமர்வுகளிலும் நேரடி விசாரணையை தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.