தமிழகம்

மழைநீர் வடிகால்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய வேண்டும்: மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக மழைநீர் வடிகால்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அது தொடர்பான அறிக்கையை 2 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சுமார் 1,894 கிமீ நீளத்தில் 7 ஆயிரத்து 350 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை குடிநீர் வாரியத்தில் சென்னையின் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு கழிவுநீர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக சென்னை குடிநீர் வாரியமே மாநகராட்சி மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்டு வருகிறது. சில இடங்களில் மழைநீர் வடிகாலை குறுக்கிட்டு செல்லும் கழிவுநீர் குழாய்களை குடிநீர் வாரியத்தினர் உடைத்து, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வழிந்தோட செய்யும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகும் முக்கிய இடமாக மழைநீர் வடிகால்கள் மாறியுள்ளன.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 28-ம் தேதி, ‘சென்னையில் அதிகரிக்கும் கொசுத் தொல்லை: உற்பத்தி ஆதாரமாக மழைநீர் வடிகால்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக, மாநகராட்சியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் ஆய்வு செய்து, கழிவுநீர் தேங்கியுள்ள வடிகால்கள், தேங்காத வடிகால்கள், கொசுப்புழு உள்ள வடிகால்கள் குறித்த விவரங்களை அடுத்த 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் மழைநீர் வடிகால்கள் குறித்து கள ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மத்திய சென்னை வட்டா துணை ஆணையர் பி.என்.தரன் ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை, அவ்வை சண்முகம் சாலை மற்றும் ஸ்மித் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை நேற்று ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT