சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மணியங்குடி கண்மாயில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டை கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவண மணியன் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அக்குழுவினர் கூறியதாவது:
17-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சேது நாட்டினை ரகுநாத கிழவன் சேதுபதி ஆட்சி செய்தார். அவருக்கு ரணசிங்க சேதுபதி, பவானி சங்கர சேதுபதி ஆகிய 2 மகன்கள் இருந்தனர். ரணசிங்க சேதுபதி சேது நாட்டின் வடப்பகுதியான திருப்பத்தூர் பகுதிக்கு ஆளுநராக இருந்தார்.
அந்த சமயத்தில் 1702-ம் ஆண்டு மதுரை அரசி ராணிமங்கம்மாவுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார். அவருக்கு அடுத்த வாரிசான பவானி சங்கர சேதுபதிக்கு சில காரணங்களால் அரசுரிமை மறுக்கப்பட்டது.
இந்நிலையில் பவானி சங்கர சேதுபதி தஞ்சை மராத்திய படைகள் உதவியோடு 1725-ம் ஆண்டில் அப்போது சேதுபதி மன்னராக இருந்த சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியை போரில் கொன்று, சேதுபதி மன்னரானார்.
அவரை மூன்றே ஆண்டுகளில் சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியின் சகோதரரான முத்து விஜய ரகுநாத சேதுபதி தோற்கடித்தார். இதனால் அவர் 1725 முதல் 1728-ம் ஆண்டு வரை மிக குறுகிய காலமே ஆட்சி செய்தார். அந்த குறுகிய காலத்திலும் கோயில்களுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளார்.
இதற்கு அடையாளமாக நயினார்கோவில் திருக்கோவிலிற்கு அண்டக்குடி என்ற ஊரினை தானமாக வழங்கிய கல்வெட்டு ஒன்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு மட்டுமே அவர் பற்றி கிடைத்திருந்தநிலையில், தற்போது காளையார்கோவில் அருகே மணியங்குடி கண்மாயில் சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் 29ஆம் நாள் சிவராத்திரி அன்று (11 டிசம்பர் 1727 மாலை 6.45 மணி) ரகுநாத கிழவன் சேதுபதியின் குமாரன் பவானி சங்கர சேதுபதி பட்டயமாக கொடுத்த நிலக்கொடையை பற்றி விவரிக்கிறது.
இந்த நிலக்கொடைக்கு தீங்கு இழைப்பவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது, என்று கூறினர்.