பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஸ்டாலின் தனது இருப்பை ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஏதாவது ஓர் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். தமிழக அரசு ஸ்டாலினிடம் பாராட்டு பெறுவது என்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற ஹெச்.ராஜா கூறியுள்ளார். அவர் இப்படிதான் எதாவது பேசிகொண்டே இருப்பார். உண்மையில், பாஜக டெல்லிக்கு ராஜாவாக தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும். பாஜக தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் மீது சவாரி செய்யத்தான் முடியும் என்பதே அவர்களின் நிலை.
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று மதுரையில் விஜயை சித்தரித்து அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர். விஜய் ரசிகர்கள் சின்னப்பிள்ளைகள். இது அவர்களுக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது ஈர்ப்பு உள்ளதையே காட்டுகிறது.
இலங்கைத் தமிழர்கள் மற்றும் நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.