புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிதாக 550 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 556 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 211 ஆகவும் உயர்ந்துள்ளது. கரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 பேர் இறந்துள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. புதுச்சேரியில் நேற்று 1,602 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை - 434, காரைக்கால் - 43, ஏனாம் - 70, மாஹே - 3 பேர் என மொத்தம் 550 பேருக்குத் (34.33 சதவீதம்) தொற்று இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுவையில் சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.56 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 13 ஆயிரத்து 556 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,511 பேர் (62.78 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 2,202 பேர், காரைக்காலில் 162 பேர், ஏனாமில் 89 பேர் என 2,453 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுவையில் 2,112 பேர், காரைக்காலில் 77 பேர், ஏனாமில் 177 பேர், மாஹேவில் 15 பேர் என மொத்தம் 2,381 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறப்பு அதிகரிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "சிறிய மாநிலமான புதுச்சேரியில் கரோனா பாதிப்பில் இறப்போர் விகிதம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இறப்பின் எண்ணிக்கை உயருகிறது. கடந்த 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் அதிக அளவாக 60 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் கடந்த வாரத்தில் கடுமையாக அதிகரித்துள்ளது. இது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்" என்று எச்சரிக்கின்றனர்.