தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகளில் பிரச்சினைகள் இருந்தால், தமிழக அதிகாரிகளுடன் பேசி, தீர்வு காண கேரள அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.
கோவையில் கைரளி கல்சுரல் அசோசியேசன் சார்பில் 16-வது ஓணம் திருவிழா நேற்று நடைபெற்றது. அதில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, மலையாள மொழிப்பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேரளத்துக்கு தமிழகத்திலிருந்தே அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதில் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளில் பிரச்சினைகள் இருந்தால், தமிழக அதிகாரிகளுடன் பேசி, அதை சரிசெய்ய கேரள அரசு தயாராக இருக்கிறது.
தமிழகத்துடன் எப்போதும் நல்ல நட்புறவைத் தொடரவேண்டுமென கேரளம் விரும்புகிறது. முல்லைப் பெரியாறு நீர்பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் நீரின் அளவு ஒருபோதும் குறையாது.
அதேசமயம் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் புதிய அணை கட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் அதிகளவில் கேரள மக்கள் வசிக்கின்றனர். இதேபோல இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களில் தமிழ் மக்கள் அதிகம் பேர் உள்ளனர். எனவே தமிழக - கேரள உறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார்.