ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

சிறப்பாசிரியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

சிறப்பாசிரியர்களுக்கு தமிழக அரசு நிரந்தரப் பணி ஆணை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே. வாசன் இன்று (ஆக.29) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர்.

ஓவிய ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பு ஆசிரியர்கள் என்று அழைக்கப்டுகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு, அதாவது தினமும் அரைநாள் மட்டும் வேலை அளிக்கப்பட்டு வருகிறது. வருடத்தில் மே மாதம் மட்டும் இவர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. ஆனால், வருடம் 11 மாதங்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. அரசு இந்த பயிற்சி ஆசிரியர்களை நிறுத்தாமல் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியது.

ஆனால் இவர்களின் பணிக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் குறைந்த ஊதியத்தில் வீட்டு வாடகை, அன்றாட உணவுக்கான செலவு போன்றவற்றை சமாளித்து ஒரு குடும்பத்தை நடத்துவது என்பது இயலாத காரியம். இருந்த போதிலும் சிறப்பு ஆசிரியர்கள், அரசு நிரந்தப் பணி வழங்கும் என்ற எதிர்ப்பார்புடன் கடந்த 8 வருடமாக காத்துகொண்டு இருக்கிறனர்.

தற்போது சிறப்பாசிரியர்கள் 16 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களை நம்பி பல ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே, தமிழக அரசு கருணையுள்ளத்தோடு சிறப்பாசிரியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்படி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT