தமிழகம்

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இன்டாஸ் நிறுவனம் சார்பில் புதிய குளோபுலின் தயாரிப்பு

செய்திப்பிரிவு

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிப்பதற்காக இன்டாஸ் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் அதிக நோயெதிர்ப்பு திறனை அளிக்கும் குளோபுலினை (Hyperimmune Globulin) தயாரித்துள்ளது.

இதுகுறித்து இன்டாஸ் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவைச் சேர்ந்த இன்டாஸ் பார்சூட்டிகல்ஸ் நிறுவனம் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தேவைப்படும் ரத்த பிளாஸ்மா சார்ந்த அல்புமின், இம்யுனோகுளோபுலின் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறது.

தற்போது இன்டாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக நோயெதிர்ப்பு திறனை அளிக்கும் குளோபுலினை தயாரித்துள்ளது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கும் இதைப் பயன்படுத்த முடியும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை இது சிறந்த மாற்று சிகிச்சையாக இருக்கும். உலக அளவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களில் இன்டாஸ் ஒன்றாகும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள அதிக நோயெதிர்ப்பு திறனை அளிக்கும் குளோபுலினை மருத்துவரீதியாக பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம்கிடைக்கும் பயன்களின் அடிப்படையில் இது கோவிட்-19 நோயாளிகளுக்குசிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து இன்டாஸ் மருத்துவமற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் பிரிவு தலைவர் டாக்டர் அலோக் சதுர்வேதி கூறும்போது, “எதிர்பார்க்காத ஒரு மருத்துவத் தேவைக்கு இன்டாஸின் ஆய்வு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தீர்வு எட்டப்பட்டுள்ளது’’ என்றார்.இன்டாஸ் துணைத் தலைவர் டாக்டர்சுமா ரே கூறும்போது, “புதிய அதிக நோயெதிர்ப்பு திறனை அளிக்கும் குளோபுலின், ரத்தம் மூலம் பரவும் வைரஸ்கள் இல்லாமல் அதிக வீரியம் கொண்ட நடுநிலைப்படுத்தப்பட்ட ஆன்டிபாடிஸ் கொண்டதாகும்” என்றார்.

கோவிட்-19 நோயிலிருந்து மீண்டவர்களிடமிருந்து பிளாஸ்மா பெற மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், ரத்த தான குழுக்களுடன் இன்டாஸ் கூட்டணி அமைக்கிறது. அரசிடமும் இதற்காக உதவி கோரப்பட்டுள்ளது. அருகில் உள்ள ரத்த வங்கி குறித்த தகவல்களை பெற ஓர் இணையதளமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT