முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றகரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தனி நபர்கள்,வணிக நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், பெருங்குடி,சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்றுநடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங் பங்கேற்று பேசியதாவது:
தற்போது சென்னையில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளநிலையில் மக்கள், முகக் கவசம்அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், தங்கள் தேவைக்காக வெளியே வரும் நிலை ஆங்காங்கே காணப்படுகிறது. எனவே, அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் சந்தை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும்,சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வியாபாரம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீதும் அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும்.
வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து தொழில் நிறுவனங்களில் பணிபுரிய சென்னைக்கு வரும் நபர்கள் மற்றும் இ-பாஸ் பெற்று வரும் நபர்களைக் கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
தற்போது டெங்கு காய்ச்சல் போன்ற பருவமழைக் கால காய்ச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வீடுதோறும் சென்று, வீட்டின்உரிமையாளரிடமும் வீட்டுக்குள் ளும், சுற்றுப்புறத்திலும் டெங்குகாய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாக ஏதுவான நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துமாறு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களின் மேற்புறங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆதாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசும்போது, “முகக் கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல்ஆகஸ்ட் 26 வரை அபராதமாக ரூ.1 கோடியே 83 லட்சத்து 44ஆயிரத்து 67 வசூலிக்கப்பட்டுள் ளது” என்றார்.
இக்கூட்டத்தில் மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி, மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) பா.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.