தமிழகம்

இ-பாஸ் முறை ரத்தாகுமா?- மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கி.மகாராஜன்

இ.பாஸ் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் ஆகஸ்ட் 31 முதல் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே பயணம் செய்ய இ-பாஸ் எடுக்கும் முறை விலக்கிக் கொள்ளப்படவில்லை.

இ-பாஸ் முறையால் இந்தியாவில் பொருளாதார பின்னடைவு மற்றும் மக்கள் வாழ்வார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் இ-பாஸ் முறைக்கு விலக்கு அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தொடர்ந்து இ-பாஸ் நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்கின்றன.

இ-பாஸ் முறையால் பல தொழில் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இ-பாஸ் முறையை தொடர்ந்து பின்பற்றினால் பொருளாதார பின்னடைவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே இ-பாஸ் முறை தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT