கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு செப்டம்பர் மாதம் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கரோனா காலத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில், வழக்கு விசாரணை கடந்த 21-ம் தேதி நடந்தது.
அன்றைய தினம் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜைத் தவிர மற்ற 8 பேரும் ஆஜராகவில்லை. இதனால், விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்குப் பிணையில் வெளியே வர முடியாத பிடியாணையை நீதிபதி பி.வடமலை பிறப்பித்து, விசாரணையை ஒத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு சயான், மனோஜ், ஜம்சீர் அலி மற்றும் மனோஜ் சமி ஆகிய நான்கு பேர் மட்டுமே ஆஜராகினர். நீதிபதி பி. வடமலை வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் கூறும்போது, ''இன்றைய விசாரணையில் 4 பேர் மட்டுமே ஆஜராகினர். பிறர் மீதான பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளது. அவர்கள் தலைமறைவாகியுள்ளதால், கோத்தகிரி போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்'' என்றார்.
கடந்த முறை சயான் செய்தியாளர்களிடம் பேசியதை அடுத்து, இன்று நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாகப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சயான் நீதிமன்றத்திலிருந்த வெளியே வந்தவுடன், அவர் செய்தியாளர்களிடம் பேசாதவாறு, காவலர்கள் அவரைக் கவனமுடன் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.