திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.12.50 லட்சம் பணத்தை மர்மநபர்கள் நூதன முறையில் கொள்ளையடித்தனர்.
திருச்செங்கோடு - சேலம் சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மாரிமுத்து என்பவர் காவல் பணி மேற்கொண்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். பின், மீண்டும் பணிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பணம் எடுக்க வந்தவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என, காட்டுவதாக கூறியுள்ளனர்.
நீண்ட நேரம் அதேபோல் இருந்துள்ளது. அதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்திற்கு வந்து பார்த்தபோது, பணம் வைக்கும் லாக்கர் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதுதொடர்பாக வங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினரிடமும் புகார் செய்யப்பட்டது.
அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஆர். செந்தில்குமார் உத்தரவின்படி காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என, வங்கி அதிகாரிகள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். கொள்ளைச் சம்பவம் நடந்தது தெரியாமல் இருக்க லாக்கரை மர்ம நபர்கள் அடைத்துச் சென்றிருப்பதாகவும் காவல் துறையினரிடம், வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் மற்றும் ஏடிஎம் இயந்திர அறையில் காவல் பணி மேற்கொண்ட காவலர் மாரிமுத்து ஆகியோரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.