5 மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் தொடரும் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், அடுத்த மாதம் என்ன நிலை என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தமிழகத்தில் 5 மாதத்திற்கு மேலாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொது முடக்கம் மூலமாக மட்டுமே கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று மத்திய அரசும், அதை அப்படியே பின்பற்றிய மாநில அரசும் நோய்த்தொற்று அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கையறு நிலையில் வேடிக்கை பார்ப்பதாகவே தெரிகிறது.
பரிசோதனை எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 6000-க்குள்ளாகவே இருப்பதும், மரணங்களின் எண்ணிக்கை 115 என்ற அளவில் இருப்பதும் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது. மேலும், மரணமடைந்த மருத்துவர்கள் எண்ணிக்கையைக் கூட தமிழக அரசு குறைத்துக் காண்பிப்பது நேர்மையற்ற செயலாகும். அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் கூட இழுத்தடிப்பு செய்யப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மறுபுறத்தில் பொதுமுடக்கத்தின் காரணமாக அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்களும் அணிதிரட்டப்படாத தொழிலாளர்களும், சுய தொழில் செய்வோரும், போக்குவரத்து வாய்ப்பு இல்லாததால் வேலைக்குச் செல்ல முடியாமல், வாழ்வாதாரத்திற்கு வழியின்றியும் மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாயும், அதற்கடுத்து சில பகுதியினருக்கு 1000 ரூபாயும் அறிவித்த மாநில அரசு தன் முழு கடமையும் முடிந்துவிட்டதாக, அதன்பிறகு கண்டுகொள்ளவே இல்லை.
துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்களும் கூட இந்தக் காலத்தில் விலையில்லாமல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு துன்பத்தில் உழலும் மக்களுக்கு நிவாரணங்களை அளிப்பதற்கும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் விலையின்றி வழங்குவதற்கும் முன்வர வேண்டும். அனைத்துக் குடும்பத்தினருக்கும் (வருமான வரி செலுத்தாத) அடுத்த ஆறு மாத காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ரூபாய் 7,500/- வழங்கிட வேண்டும்.
பொதுமுடக்கம் 5 மாத காலத்திற்கு மேலான நிலையில் வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும் மக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தினசரி வேலைக்குச் செல்வோர் அதற்கான வாய்ப்பின்றி சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் பொதுப் போக்குவரத்து தொடங்குவது குறித்து மாநில அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
ஏற்கெனவே அனுசரிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதியில் நிறைவடைய உள்ளது. தொடர்ச்சியான ஊரடங்கு, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது மக்களுக்குக் கடும் சிரமத்தை அளித்துள்ளது. அதேசமயம் அனைத்துத் தளர்வுகளும் ரத்து செய்யப்படுமானால் நோய்ப்பரவல் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது.
மேலும், கரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதற்கு மாநில அரசு மறுத்து வருகிறது. எல்லாம் எமக்குத் தெரியும் என்கிற அதிகாரத் தோரணையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கோ, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கோ இயலவில்லை. இந்தத் தோல்விகளுக்கு முழுமையாக மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைகளை மேம்படுத்தவும், மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்திட வேண்டும். தொற்றுள்ளவர்களைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு உரிய சிகிச்சை அளித்து இறப்புகளை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, வேலை - வருமானத்தைப் பெற்றிட, ஊரடங்கைத் தளர்த்துவது, மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு தெளிவான முடிவுகளை மேற்கொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டத்தினைக் கூட்டி விவாதித்து, முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.