ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் துறைமுகத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் சரக்கு கையாளுவது பாதிக்கப்பட்டுள்ளதாக, துறைமுக சரக்கு கையாளுவோர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் டி.வேல்சங்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தொழில் துறையில் கடந்த 50 ஆண்டுகளாக முன்னேறி வந்த தூத்துக்குடி மாவட்டம், தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருந்து வந்தது.
இதனால் பல்வேறு புதிய தொழில்கள் இங்கு தொடங்கப்பட்டன. வேலைவாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம், மாவட்ட வருவாய் என பல்வேறு வளர்ச்சி நிலையை தூத்துக்குடி எட்டி பிடித்திருந்தது.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சிக்கு பதிலாக பல்வேறு துறைகளில் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக தொழில்துறையில் இந்த சரிவு அதிகமாகி வருகிறது.
தூத்துக்குடி நகரில் நடைபெற்று வந்த பல்வேறு வியாபாரங்கள், சுயதொழில்கள், லாரி போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், பெட்ரோல் நிலையங்கள், மெக்கானிக் தொழில்கள், லேத் பட்டறைகள், டயர் வியாபாரங்கள், கார் மற்றும் லாரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என பல தரப்பட்ட தொழில்கள் நேரடியாக சரிவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியை தவிர மற்ற பொருட்களின் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. துறைமுகத்தில் இறக்குமதி 15 சதவீதமும், ஏற்றுமதி 40 சதவீதமும் குறைந்துள்ளது. தொழிற்சாலைகள் முழுமையாக செயல்படாததால் தான் இந்த நிலை உள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பு எங்களை போன்ற தொழில் துறையினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் டன் சரக்குகள் துறைமுகத்தில் கையாளப்பட்டு வந்தது. இது தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பால் அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் அரசு உதவி செய்ய முன்வரவேண்டும். செயல்படாத தொழிற்சாலைகளை செயல்பட வைத்தால் கூடுதல் சரக்கு வரும். தூத்துக்குடி துறைமுகம் தென்னிந்தியாவில் சிறந்த துறைமும். ஆண்டுக்கு 65 மில்லியன் சரக்கு கையாளும் திறன் கொண்டது. ஆனால், கடந்த ஆண்டில் 50 சதவீதம் தான் சரக்கு கையாளப்பட்டுள்ளது.
இந்த நிலை மாற தென் மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகள் வர வேண்டும். அதற்கு அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர். அப்போது சங்கத்தின் துணைத்தலைவர் பீர் முகமது, செயலாளர் கார்த்திக பிரபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.