முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஏதுமின்றி கொடைக்கானல் நட்சத்திர ஏரி திறக்கப்பட்டதால், திடீரென அதிகநீர்வரத்து ஏற்பட்டதால் வழியோர மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ளது நட்சத்திரவடிவிலான ஏரி
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பழநி அருகேயுள்ள நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது.
கடந்த சிலதினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. ஏரி நேற்று இரவு நிரம்பியது.
உபரிநீர் வெளியே சென்ற நிலையில், நகராட்சி நிர்வாகம் ஏரியின் மதகை இன்று காலை திறந்துவிட்டது.
இதனால் அதிப்படியான நீர் வெளியேறியது. பான்ஹில்ரோடு அருகே ஓடையில் குளித்துக்கொண்டிருந்த மலையன்(72) என்பவரை நீர் அடித்துச்சென்றதில் படுகாயமடைந்தார். இதைக் கண்டவர்கள் அவரை மீட்டனர்.
அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது குறித்து கரையோர மக்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காததால் மக்கள் அச்சமடைந்தனர்.
இனி வரும்காலங்களில் ஏரியில் நீர்திறப்பை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.