தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடைபெறும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடைபெறுவதை வருவமான வரித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மதிவாணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நாட்டில் கருப்பு பணப் புழக்கத்தை ஒழிக்க டிஜிட்டல் மற்றும் மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய வருமான வரிச் சட்டத்தில் 2017 ஏப்ரல் 1-ல் 269 எஸ்டி மற்றும் 271 டிஏ என்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
இப்பிரிவில் ஒருவர் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பண பரிவர்த்தனை மேற்கொண்டால், அந்த பரிவர்த்தனை டிஜிட்டல், காசோலை, என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் முறைகளில் நடைபெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விதி பத்திரப்பதிரவு அலுவலகங்களில் பின்பற்றப்படுவதில்லை.
இதனால் தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடைபெறும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரிச்சட்டம் 269 எஸ்டி பிரிவின் கீழ் டிஜிட்டல், ஆன்லைன் வழியாக நடைபெறவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பதிவுத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பத்திரப்பதிவு அலுவலகங்களில் மனுதாரர் குறிப்பிடும் நடைமுறை 2019 பிப்ரவரி மாதம் முதல் அமலில் உள்ளது என்றார்.
இதையடுத்து, இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படுகிறது என்பதை வருமான வரித்துறையினர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.