மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பஸ்நிலையக் கட்டு மானப் பணி, மல்டி லெவல் கார் பார்க்கிங், வைகை ஆற்றின் கரையோரத்தில் சாலை அமைப்பது, புரதானச் சின்னங் களை புனரமைப்பது, தமுக்கத்தில் கலாச்சார மையம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
இந்தத் திட்டங்களை டெண்டர் எடுத்த நிறுவனங்கள், 90 சதவீதம் வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டன. கரோனா வேகமாகப் பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது உள்ளூர்த் தொழிலாளர்களைக் கொண்டே ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கின்றன. ஆனால், இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க முடியாததால், அதற்கானத் தொகையைப் பெற முடியாமல் டெண்டர் எடுத்த நிறுவனங்கள் சிரமப்பட்டு வரு கின்றன.
எனவே, கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வட மாநிலத் தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்துவர மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.