ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்திருந்த பேனர். 
தமிழகம்

முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டத்தில் பேனர்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘தேசம் காப்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்று அச்சிடப்பட்டிருந்த பேனரை வைத்திருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, கூறியபோது, “திமுக கூட்டணியில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளராக இருக்க முடியும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, இவ்வாறு பேனர் வைக்க வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைமை அறிவுறுத்தவில்லை. ஸ்ரீரங்கத்தில் ஆர்வத்தில் செய்துவிட்டனர்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிச் செயலாளர் ஏ.வேளாங்கண்ணி கூறியபோது, “திமுக கூட்டணிக்கு ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். அதை பிரபலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பேனர் வைத்தேன்” என்றார்.

SCROLL FOR NEXT