திருச்சி கீழ்கல்கண்டார்கோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தடைகோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்சியைச் சேர்ந்த விஜயகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சி கீழ்கல்கண்டார் கோட்டையில் 2000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 600 ஏக்கர் பரப்பில் வாழை, நெல், உளுந்து பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழ்கல்கண்டார் கோட்டையில் கழிவு நீர் சேகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இவ்விரு நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் நிலம், நீர், பொது சுகாதார பாதிப்பு ஏற்படும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசடையும்.
எனவே விவசாய நிலம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க கீழ்கல்கண்டார் கோட்டையில் கழிவு நீர் சேகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தடை விதித்தும், இத்திட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இரு திட்டங்களுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதயடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
விவசாய நிலங்களில் கழிவுநீர் செல்லாத வகையிலும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசாத வகையிலும் கட்டமைப்பு இருக்க வேண்டும்.
கட்டுமானப் பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் செப். 6-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.