சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற தனியார் பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆணையர் பிரகாஷ், கரோனா சோதனைக்கு வருபவர்கள் அனைவரது தகவல்களையும் மாநகராட்சியிடம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற தனியார் பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் இன்று (26.08.2020) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 44 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 13 அரசு பரிசோதனை மையங்களும், 31 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. இம்மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.
அவ்வாறு மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வருகைதரும் நோயாளிகளின் முழு விவரங்கள் மற்றும் தகவல்களைக் கட்டாயம் தெரிவித்தல், சோதனை செய்ய வருபவர்களின் சுய விவரங்களைச் சேகரித்து அவர்களின் கையொப்பம் பெறுதல், குறிப்பாக பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர், அவரின் முழு முகவரி (Address proof), வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் விவரங்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தையும் பரிசோதனை மையங்கள் மாநகராட்சிக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையினை துல்லியமான முறையில் மேற்கொண்டு, முடிவினை 24 மணிநேரத்தில் தெரிவிக்க வேண்டும். பரிசோதனை மையங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் தொழில்நுட்பத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். சென்னையில் நாள்தோறும் 12,000-க்கும் மேல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் இதுவரை 9,64,638 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனைக் கூடங்கள் பின்பற்ற வேண்டும். கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்தில் ICMR இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் விவரங்கள் சென்னை மாவட்டக் கணக்கில் பதிவிடப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
தொற்று பாதித்தவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டத்தின் பதிவில் சேர்க்கப்பட வேண்டும். பரிசோதனைக் கூடங்களில் ICMR வழிமுறைகளைப் பின்பற்றி அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும்”.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் பேசினார்.