சென்னையில் கரோனா பரிசோதனை முடிவுகளைத் குறுந்தகவல் மூலம் 24 மணி நேரத்தில் அறியும் வசதியை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பிரபல பாடகர் எஸ்பிபி, காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை குறித்து அவர் தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அளித்த பேட்டி:
“சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுக்குள்தான் உள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகள் பொதுமக்கள் அலைபேசிக்கு உடனடியாக 24 மணி நேரத்திற்கு குறுந்தகவலாக அளிக்கப்படும். பொதுமக்கள் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டவுடன் உடனடியாகச் சிகிச்சைக்கு வர வேண்டும்.
தாமதமாக சிகிச்சை வருவதுதான் மருத்துவர்களுக்குச் சவாலாக உள்ளது. மூச்சுத்திணறல், ஆக்சிஜன் அளவு குறைந்தபின் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து, காப்பாற்றுவதில் சிரமம் உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். ஆனாலும் தேவைப்பட்டால் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன் உறுப்பினர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.
சென்னையில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. உரிய பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை குறித்து முதல்வர் உத்தரவுப்படி நானும், ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தோம்.
தேவையான உதவிகளை அரசு செய்வதாக தெரிவித்தோம். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அதேபோன்று காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை உள்ளது”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.