ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸின் எஸ்.சி. துறை தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கு.செல்வப்பெருந்தகை இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை:
"ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக அறிவிக்க வேண்டும். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணி நியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை பணி பெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு ஆசிரியர் பணி நியமனம் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆசிரியர் தகுதித் தேர்வின் அர்த்தத்தை இழக்கச் செய்துவிடும். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிஹார், ஹரியாணா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் காலத்தை ஏற்கெனவே நீட்டித்தது போல தமிழக அரசும் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும்.
மேலும், ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10 ஆயிரம் சம்பளத்தில் அவர்களை பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும்.
நீண்ட நாட்களாக 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். எனவே தமிழக முதல்வர், அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் படி வேண்டுகிறேன்".
இவ்வாறு கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.