சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த். 
தமிழகம்

தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகம்; குடும்பத்தினருடன் விஜயகாந்த் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: தமிழிசை, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 68-வது பிறந்தநாளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினர். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக கட்சியின் நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் 68-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த், அனைவருக்கும்இனிப்பு வழங்கினார். குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

‘கரோனா பரவல் உள்ள நிலையில், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதோடு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும்’ என்று விஜயகாந்த் அறிவுறுத்தியதால், மாவட்டம்தோறும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினர். சென்னையில் தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா இனிப்பு வழங்கினார். மூத்த மகன் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று முன்தினமே விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், நேற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ‘வானத்தைப் போல’ பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், ‘மரியாதை’யையும் பெற்று ‘புலன் விசாரணை செய்தாலும் குறை கண்டுபிடிக்க முடியாத அன்பின் ‘சகாப்தமாக’, ‘கேப்டனாக’, ‘மரியாதை’யுடன், ‘நெறஞ்ச மனசு’டன் வலம்வரும் அண்ணன் விஜயகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் பூரண உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதியிடம் குறையாத பாசத்துக்கு பாத்திரமாக திகழ்ந்தவரும், என்றும் எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 68-ல் அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: திரைத் துறையில் சாதனைபடைத்து, ஏழை, எளிய மக்களுக்காகவும், தமிழக உரிமைகளுக்காகவும் பாடுபட்டுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காண காத்திருக்கிறது. மக்கள் பணியைத் தொடர நண்பர் விஜயகாந்துக்கு வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தமாகாதலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சமக தலைவர் சரத்குமார் உட்பட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கூட்டணி தொடருமா? பிரேமலதா பதில்

செய்தியாளர்களிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியபோது, ‘‘இப்போதைக்கு அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது. தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும், விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆக இருக்கவேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. தேமுதிகவுக்கு கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் கிடைக்கும். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பது குறித்து டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி முடிவெடுத்து, விஜயகாந்த் அறிவிப்பார்’’ என்றார்.

SCROLL FOR NEXT