தமிழகம்

கரோனா பரவல் தொடர்பாக ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆக.29-ல் ஆலோசனை: அடுத்த மாதமும் ஊரடங்கு நீட்டிப்பா?- போக்குவரத்தில் தளர்வுக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் 8-ம் கட்டமாக அடுத்த மாதமும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவில் தொடங்கிய இந்த ஊரடங்கின் கட்டுப்பாடுகள், சில தளர்வுகளுடன் 7-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது.

தற்போது வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்படவே வாய்ப்புள்ளது. அதேநேரம் மத்திய அரசு தளர்வுகள் அறிவிக்கும் என்பதால், போக்குவரத்து ரீதியிலான சில தடைகள் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் 8-ம் கட்டமாக செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும்29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போது நாள்தோறும் 5 ஆயிரத்து 800 முதல் 6 ஆயிரத்துக்குள் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பரிசோதனை எண்ணிக்கையை இன்னும் அதிகரித்தால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்துசெய்யும்படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார்.

இ-பாஸ் குறித்த அறிவிப்பு

எனவே, வரும் 29-ம் தேதி காலையில் நடக்கும் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில், மாவட்டங்களில் வைரஸ் தொற்று நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன், இ-பாஸ் தடை, ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இ-பாஸ் விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் அன்றைய தினம் மாலை வெளியாகும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT