சென்னையை சேர்ந்த மாணவியை லண்டனில் தீவிரவாதிகள் கடத்தியது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்றார். இந்நிலையில், மகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி கடந்த மே 28-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மாணவி கடத்தப்பட்டிருப்பதும், கடத்தலில் சர்வதேச தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பதும்தெரிந்தது. அதைத் தொடர்ந்துடெல்லியில் மத்திய உள்துறைஅமைச்சகத்திடம் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி இவ்வழக்கு மாற்றப்பட்டது.
அரசியல்வாதியின் மகன்
என்ஐஏ மேற்கொண்ட விசாரணையில், நஃபீஸ் என்ற வங்கதேசத்தை சேர்ந்த நபர் மற்றும் அவரது கூட்டாளிகள் மாணவியை லண்டனில் கடத்தியதும், அவரை மிரட்டி மதமாற்றம் செய்ததும் தெரியவந்தது. இதில் நபீஸுடன் பிரபல மதபோதகர் ஜாகீர்நாயக்குக்கும் தொடர்பு இருப்பதுவிசாரணையில் தெரியவந்தது. நபீஸ் வங்கதேச அரசியல்வாதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தல் விவகாரத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடத்தலில் தொடர்புடைய நபீஸை இந்தியா அழைத்து வந்து விசாரணை செய்யவும் என்ஐஏ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.