தமிழகம்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யின் கரோனா தடுப்பு மருந்து: சென்னையில் 2 மருத்துவமனைகளில் சோதனை

செய்திப்பிரிவு

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்து சென்னையில் 2 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்படவுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டுவரும் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை 2-ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள ‘கோவிசீல்டு’ தடுப்பு மருந்தின் முதல் கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த பரிசோதனை இந்தியாவில் டெல்லி, சண்டிகர், புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது.

இதில் தமிழகத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் 150 பேருக்கும், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் 120 பேருக்கும்தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள ‘கோவிசீல்டு’ தடுப்பு மருந்தின் 2-ம் கட்ட ஆராய்ச்சியை இந்தியாவில் மேற்கொள்ள இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி வழங்கியுள்ளது. 2-ம் கட்ட ஆராய்ச்சி வெற்றி அடைந்தால் 3-ம் கட்ட ஆராய்ச்சி நடைபெறும். அதன்பிறகு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT