மூணாறு மண் சரிவில் சிக்கி உயிரிழந்த கயத்தாற்றைச் சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை பெட்டிமுடி தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த 6-ம் தேதி பெய்த கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
இதில், அங்கு வீடுகளில் தங்கியிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட உடல்களில், கயத்தாற்று பாரதி நகரைச்சேர்ந்த 33 தொழிலாளர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கயத்தாறு பாரதி நகருக்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிந்தோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசும்போது, பெட்டிமுடி ராஜமலை தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பாரதிநகரைச் சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்து வாடுவோருக்கு விரைவில் திமுக ஆட்சி அமைந்து வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர், கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு ஜெகன், மாநில விவசாய அணி சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் சின்னப் பாண்டியன், நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், மண் சரிவில் உயிரிழந்த ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்த 4 தொழிலாளர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார்.